கூடங்குளம்: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இடிந்தகரையில் இன்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளதால் அங்கு செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுக்காக இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு அணு உலையில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த இரண்டு மாதகாலமாக கூடங்குளத்தை சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன்வளம் பாதிக்கும் என்றும், தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும் என்று அச்சமடைந்துள்ள மீனவர்கள் அணு மின்நிலையத்தை மூடக்கோரி கடந்த மூன்று நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் குவிந்துள்ளனர்.
25 பேர் கவலைக்கிடம்
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 127 பேரில் 25 நபர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு உண்ணாவிரதப்பந்தலில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தெற்கு பிரான்ஸில் உள்ள மொரகுல் அணு உலை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளவர்களை அச்சமடையச்செய்துள்ளது. கூடங்குளம் அணுமின்நிலையத்தை ஒருபோதும் செயல்பட விடப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க இடிந்த கரை வழியாக செல்லும் பேருந்துகளை போலீசார் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். இருப்பினும் பொதுமக்கள் நடைபயணமாக இடிந்தகரைக்கு வந்த வண்ணம் இருப்பதால் பந்தல் நிரம்பி வழிகிறது. பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு வணிகர்சங்கப்பேரவைத் தலைவர் த. வெள்ளையன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அப்போது கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரும் 20-ம்தேதி கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்துடன் கல்பாக்கம் அணுமின்நிலையத்தையும் மூடவேண்டும் என்று த. வெள்ளையன் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே இடிந்தகரையை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாளாக கூடங்குளத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லவில்லை. மாணவர்கள் இன்றும் வகுப்புகளை புறக்கணித்தனர். கூடங்குளத்தை சுற்றியுள்ள அரசு சுகாதார மையங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
[ கருத்தை எழுதுங்கள் ]
No comments:
Post a Comment