மறவர் போற்றும் வீரப்போர்
தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது.
படை பலம்
அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் காட்டியது, நால்வகைப் படைபலங்களே ஆகும்.
தனி ஒரு வீரரும் தம் வீரத்தை தயங்காது முன்னேறிக் காட்டினர். அவர்களின் போர்ப்படைகளிலே தேர்ப்படை, யானைப்டை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் இருந்தன என்பதை,
“தேரும், யானையும், குதிரையும், பிறவும் ஊர்ந்தனர் இயங்கவும் உடையர் என்ப” (பொ. மெல்.17)
என்று தொல்காப்பியரே தெளிவாகக் காட்டியுள்ளார். இச்சூத்திரம் தொல்காப்பியர் காலத்திலிருந்த ஊர்திகளைக் காட்டுகிறது. இவ்வூர்திகளை படைகளாலே பயன்படுத்திக் கொண்டு தம் வீரப் போரை நிகழ்த்தினர். இதனையே,
“தானை, யானை, குதிரை, என்ற
நோனார் உட்கும் மூவகை நிலையும்” (தொல். பொ.புற. 14)
என்ற நூற்பாவினால் தெளிவாக உணரலாம். அன்று தொல்காப்பியர் குறிப்பிட்ட இப்போர் வகைகளே இன்றும் உலக அளவில் ஒரு நாட்டிற்கு பாதுகாப்பைத் தேடித் தருகின்றது.
“தேரோர் தோற்றாய வென்றியும், தேரோர்
வென்ற கோமான் முன் தேர்க் கறவையும்” (தொ.பொ.புற.17)
தேரிலே ஏறிவந்த பொருளர் முதலியோடு புகழ்ந்து கூறிக்காட்டி வெற்றியும், தேரேறிப் போர் செய்ய வந்த அரசர்களை வென்ற வேந்தன், தன் வெற்றிக்களிப்பால் தேர்த்தட்டிலே ஏறி நின்று ஆடும் குரவைக் கூத்துமூ, என்று வந்துள்ளமையால் தேர்ப்படையின் சிறப்புக் கூறப்படுகிறது.
தொல்காப்பியர் காலத்துத் தமிழ்மக்கள் கடல் கடந்து சென்றனர். அதாவது கப்பலேறிக் கடல் கடந்து சென்றனர். இதனடிப்படையில் கால்நடையாகப் பொருள் தேடச் செல்வதற்குக் காலிற் பிளவு என்று பெயர்.
பண்டைத் தமிழர் பண்பாட்டில் “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்பது இன்றும் வழங்கிவரும் ஒன்றாகும். ஆகவே தான் கடல் தாண்டி செல்வதற்குக் கருவிகளையும், ஓடங்களையும், கட்டு மரங்களையும் அமைப்பதற்கு அவர்கள் அறிந்திருந்தனர். இது பிற்காலத்தில் அவர்களுக்குக் கப்பற்படை அமைக்கம் திறமை உண்டாகக் காரணமாக இருந்தது. கப்பற்படை தொல்காப்பியர் காலத்தில் இருந்ததாகச் சொல்வதற்கு இடமில்லை.
முறையான போர்
பண்டைத் தமிழர்கள் ஆக்கிரமிப்புப்போரை அடியோடு வெறுத்தனர். எதிர்த்து வந்தவர்களைக் கண்டு அஞ்சவில்லை. தற்காப்புப் போர் புரிந்து வெற்றி கொண்டனர். தங்களது குடிகளை நடுங்கவைக்கும் கொடுங்கோல் மன்னர்களைப் பண்டையத் தமிழர்கள் சும்மா விட்டு வைக்கவில்லை. அவர்களைப்போரினைக் கொண்டு விரட்டினர்.
“வஞ்சி தானே முல்லையது புறனேஎஞ்சா மன்னரை வேந்தனை வேந்தன் அஞ்சாதத் தலைச் சென்று அடல்குறித்தன்றே” (தொல். பொ. பு. 6)
வஞ்சியென்பது முல்லையென்னும் அகத்திணையோடு தொடர்புடையது. அடங்காத மன்னனைக் கொண்டு, நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த வேந்தனை, அறங்கருதும் மற்றொரு வேந்தன், படையெடுத்து வந்து அதிகப்படி படை திரட்டிச் சென்று அவனோடு போர் செய்வது.
“தும்பை தானே நெய்தலது புறனே
மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
சென்றுதலை யழிக்கும் சிறப்பிற் றென்ப” (தொ. பொ. புற. 12)
தும்பை என்பது நெய்தல் என்னும் அகத்திணையோடு தொடர்புடையது. தனது ஆற்றலை உலகம் புகழ வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு, போர் புணர வந்த அரக்கனை, எதிர்த்துச் சென்று போர் செய்து அவன் கர்வத்தைப்போர்க்களத்திலே அழிக்கும் சிறந்த செயல் ஆகும்.
தமிழர்கள் அகந்தை கொண்டு ஆக்கிரமிப்புப் போரிலே இறங்கமாட்டார்கள், எதிரிகளுக்கு அடிபணியவும் மாட்டார்கள். தற்காப்புப்போரின் மூலம் தங்கள் வீரத்தையும், வாழ்க்கையும், பாதுகாத்துக்கொள்ளும் பண்புடையவர்கள். இவ்வுண்மைகளை மேலே காட்டிய வஞ்சித்திணை, தும்பைத்திணை இரண்டும் விளக்கும்.
அறப்போர்
என்று நெட்டியமையார் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடிய பாட்டால் அவன் படையெடுக்கும் முன்னர் ஆநிரை முதலியவைகளைக் கவர்ந்து கொள்ளுமாறு பகைவர்க்கு அறிவித்தான் என்பது தெளிவாகிறது. இந்தப் பாடலினை விதிமுறையாகக் கொண்டே சங்க காலத்தில் போர்ச்செயல்கள் நடைபெற்றன. மறவர்கள் அறத்தை மானமாகக் காத்து வந்தனர் என்பதும் இப்பாடலால் அறியலாம். இப்பாட்டு போரின் கொடுமையிலிருந்து விலக்கப்பட வேண்டியவர்களைத் தொகுத்துக் கூறுகிறது.
வீரர்கள் யாருக்கு பணியாவிட்டாலும் பார்ப்பனருக்குப் பணிந்தனர் என்பதை
“பார்ப்பார்க்கல்லது பணியறியலையே”
“பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்”
என்ற தொடர்கள் பாப்பனரைக் கொலை புரிதல் கொடும்பாவமெக் கருதினர் என்பதையும் எடுத்துரைக்கின்றன. பார்ப்பார் என்னும் சொல் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணரைக் குறிக்கும் எனலாம்.
தொல்காப்பியர் கால அரசர்கள் “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்ற உணர்வை தலையெனக் காத்து போர் செய்து வந்தனர்.
No comments:
Post a Comment