engalin uyir

engalin uyir
தங்கள் வருகைக்கு நன்றி வாழ்க நம் முக்குலம் ( மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தேவர்கள் என்று அழைக்கப்படும் சாதியினரின் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சி ஆகும். இது முக்குலத்தினர் எனப்படும் கள்ளர்,மறவர்,அகமுடையர் என்கிற மூன்று சாதியினரின் கூட்டுச் சங்கமாக முக்குலத்தோர் சங்கம் எனும் பெயரில் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டது. இதன் நிறுவனர் பிரேம்குமார் வாண்டையார். இவரது மறைவுக்குப் பின் தற்போதைய தலைவராக ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் என்பவர் இருந்து வருகிறார். ).

Wednesday, 19 October 2011

முக்குலத்தோர் இன் முதல் கடவுள்

முக்குலத்தோர்  கடவுள்


அந்தச் சிலையின் தலை உடைக்கப்பட்டு, அந்த சிலையின் காலடியிலேயே கிடக்கிறது. கைகள் இரண்டும் துண்டு துண்டாக சிதைக்கப்பட்டு, அதுவும் கீழே பரிதாபமாக விழுந்து கிடக்கின்றன. மார்பு பகுதியோ அனாதை மாதிரி அருகில் உடைந்து புதைந்திருக்கிறது.
ஆனால் அந்தச் சிலை மட்டும் தலையில்லா முண்டமாக, இடுப்பு வரைக்குமாக இரண்டு கால்களுடன் நின்று கொண்டிருக்கிறது. உடைந்து கிடக்கும் தலை, மார்பு, கை, கால் என்று எல்லாவற்றிற்கும் சந்தனம், குங்குமம், மாலை இட்டு, ஆடு, கோழி பலியிட்டு பயபக்தியுடன் விழுந்து விழுந்து வணங்குகிறார்கள் பக்தர்கள்.
கோயில் சிலைகளில் சாதாரண-மாக சிறு விரிசல் ஏற்பட்டால்கூட பின்னமாகி விட்டது என்று, இதுநாள் வரை வழிபடப்பட்ட சிலை, மூன்றாவது பிராகாரத்தின் மூலைக்குத் தள்ளப்படும் ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஒரு சிலையின், தூள்தூளாக்கப்-பட்ட எல்லாப் பகுதிகளும் தனித்தனியாக வழிப்படப்படும் இடம் எங்கே என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
அப்படியானால், உடனே நீங்கள் மதுரைக்குச் செல்லுங்கள். பஸ் ஸ்டாண்டிலோ, தமுக்கம் மைதானத்-திலோ வெள்ளந்தியாக நின்று கொண்டிருக்கும் அந்தத் தெற்கத்தி மக்களின் கூட்டத்தை நோக்கிப் ‘‘பாண்டீய்’’ என்று உரத்த குரல் எழுப்புங்கள். நூற்றுக்கு முப்பது பாண்டிகள் திரும்பிப் பார்ப்பார்கள்!
அவர்களில் ஒருவரிடம், பாண்டி என்று அவருக்கு ஏன் பெயர் வைத்தார்கள்? என்று கேளுங்கள். அல்லது அவர்களின் குல-தெய்வத்தின் பெயரைக் கேளுங்கள்.
‘‘பாண்டி முனீஸ்வரர்’’ என்று பெருமையாக பதில் சொல்வார்கள். அந்தப் பாண்டி கோயிலில்தான், தூள்தூளாக உடைக்கப்-பட்ட சமயக் கருப்பனை நீங்கள் காணமுடியும். இவருக்கு பக்தர்கள் விரும்பிப் படைப்பது என்னென்ன தெரியுமா? ஆச்சரியப்படாதீர்கள் சாராயம், பிராந்தி, சுருட்டு! சமயத்தில் கஞ்சா!

பாண்டி கோவிலருகே நீங்கள் சென்றதுமே ஒரு கிராமத்து வாசனையை உணர்வீர்கள். மரமும் மரம் சார்ந்த மணலும் கலந்த சூழல்.
கரிய பெரிய உருவம், சடாமுடி, ஆங்காரமான விழிகள், முறுக்கிவிடப்-பட்ட மீசை என்று உக்கிரமாக, படு‘துடி’யாக ஆனால், சம்மணமிட்ட தவக்கோலத்தில் காட்சி தரும் பாண்டி முனீஸ்வரரை பார்த்தால் முதலில் பயம் வரும். பின்னர் பக்தி வரும். பயபக்தி! முக்குலத்தோரின் முழுமுதற் தெய்வமான இந்தப் பாண்டி முனீஸ்வரர் யார் தெரியுமா?
சிலப்பதிகாரத்தை நீங்கள் எட்டாம் வகுப்பிலேயே படித்திருப்-பீர்கள். கண்ணகி _ கோவலன் _ காற்சிலம்பு _ பாண்டிய மன்னன் _ நீதி _ உயிர்நீத்தல். ஆமாம். அதேதான். நீதிநெறி தவறாமல் ஆண்டு வந்து ஒரே ஒரு முறை அறியாது பிழை செய்திருப்பினும், ‘யானே கள்வன்’ என்று மானஸ்தனாய் உயிர்நீத்தானே மதுரை பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், அவன்தான் இங்கே பாண்டி முனீஸ்வரராக அருளாட்சி புரிகிறார்.
அப்போது ஏன் தவக்கோலம் என்று கேட்கிறீர்களா?
இதோ 200 வருஷத்திற்கு முன்பு நடந்த அந்தக் கதை.
கரூர் பக்கத்திலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக மதுரைக்கு வந்தது ஒரு கூட்டம். இப்போது கோயிலிருக்கும் இடத்தின் அருகில் அவர்கள் கூடாரமிட்டுத் தங்கினார்கள்.
அதிலே வள்ளியம்மாள், பெரியசாமி என்கிற ஒரு முதிய தம்பதியினரும் இருந்தார்கள். கொடுத்து வைத்த ஜோடி!
அன்றிரவு, வள்ளியம்மாளின் கனவிலே வந்தார் ஒரு முனிவர்.
‘‘அம்மா, நீங்கள் கூடாரம் இட்டுத் தங்கியிருக்குமிடம் எது தெரியுமா? ஒரு காலத்தில் என்னுடைய அரண்மனை இருந்த இடம் இது. நான் யார் என்று புரிகிறதா? பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நான்தான். கண்ணகிக்குத் தவறான நீதி வழங்கியதால் உயிர் நீத்த நான், மறுபிறவியிலும் மானிடனாகப் பிறந்தேன். கண்ணகிக்கு நான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் பண்ண, சடாமுடியுடன் சதா நேரமும் சதாசிவனைக் குறித்து தவமிருந்தேன். என் தவத்திற்கு மெச்சிய சிவ-பெருமான், என்னைத் தன்னுடனேயே சேர்த்துக் கொண்டார்.
எனவே, நான் இருந்த தவக்கோலத்தி-லேயே என் உடல் சிலையாக மாறி மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு-
விட்டது. நான் மீண்டும் வெளிவரும் நேரம் வந்துவிட்டது. ஈஸ்வரனால் ஆட்-கொள்ளப்பட்ட முனிவரானதால் நானும் ஈஸ்வரனாக, முனீஸ்வரனாக அருள்பாலிக்கப் போகிறேன்.
இங்கே நீ உறங்கும் இடத்திற்கு அருகில்தான் எட்டடி ஆழத்தில் நான் பூமிக்குள் புதையுண்டிருக்-கிறேன். என்னை வெளியில் எடுத்து வழிபட்டால் உன்னையும், உன் கூட்டத்தாரையும் நான் பரம்பரை பரம்பரையாக வாழ வைப்பேன்’’ என்றார், முனீஸ்வரர்.
விதிர்விதிர்த்து எழுந்தாள் வள்ளியம்மாள்.
தன் கூட்டத்தாரிடமும் ஊராரிடமும், தான் கண்ட கனவைச் சொன்னாள்.
அவள் கூறிய இடத்தில் பூமி தோண்டப்பட்டது. அங்கே ஆழத்தில்... ஆழத்தில்... பாண்டி முனீஸ்வரர்!
அப்புறம் என்ன? சின்னதாய்க் குடிசையில் எழுந்தருளிய பாண்டி, இன்று பெரிய கோயிலில் அருளாட்சி புரிகிறார். இவரை அடையாளம் காட்டிய வள்ளியம்மை-யின் வாரிசுகளே இன்றும் பூசாரியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரையைச் சுற்றியுள்ள மேல-மடை, மானகிரி, உத்தங்குடி, வண்டி-யூர், கருப்பாயூரணி கிராமங்களுக்குக் காவல் தெய்வம் பாண்டிதான். அது மட்டுமல்ல, லட்சக்கணக்கான மக்களுக்கும் குல தெய்வமாக அருள் பாலிக்கிறார் பாண்டி முனீஸ்வரர்.
குழந்தைப்பேறு இல்லாதவர்-களுக்கு பாண்டி கைகண்ட தெய்வம் என்கிறார்கள் பக்தர்கள். பிள்ளை வரத்திற்காகக் கட்டப்பட்ட தொட்டில்களே இதற்குச் சாட்சி சொல்கின்றன. ‘காதணி கோயில்’ என்றும் இதனை அழைக்கிறார்கள். குழந்தை பிறந்ததும் காது குத்தி, முதல் மொட்டையும் இங்கேதான்.
பாண்டி முனீஸ்வரரை வணங்கி-விட்டு வெளியில் வந்தால், சங்கிலி கருப்பன் பயமுறுத்தும்படி காட்சி-யளிக்கிறார். (கருப்பனின் கதையைச் சென்றவாரம் பார்த்திருப்பீர்கள்) அவர் காலடியில் சில சுருட்டுகள். இங்கே
பூசாரி, ஒரு பெண்மணி! அட!
அடுத்ததாக பொங்கலிடும் இடமும், ஆடு, சேவல்கள் பலியிடும் இடமும் காணப்படுகின்றன. ஆங்காங்கே புனிதமான ரத்தக் கறைகள்.
பிராகாரங்கள், சுற்றுச்சுவர்கள், தாழ்வாரங்கள், எதையும் எதிர்பார்க்கா-மல் மரங்கள் அடர்ந்திருக்க, மண் தரையில் நடந்தால் கொஞ்சம் தொலைவில் ஆண்டிச்சாமி சன்னதி வருகிறது.
இங்கு உருவம் எதுவும் கிடையாது. ஒரு மேடை. அவ்வளவுதான். யார் இந்த ஆண்டி? நம் பழனியாண்டிதான்! அரூபமான சிவனின் வழிபாட்டை, அவரது மகனிடமே நடத்துவது எத்தனை பெரிய விஷயம்!
இன்னும் சற்று மண் தரையில் நடந்தால், சமயக் கருப்பரின் சன்னதி. துண்டு துண்டாய் உடைக்கப்பட்ட சமயக் கருப்பர். யார் இவர்? பாண்டி முனீஸ்வரரின் காவல்காரர் இவர்தான்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்தப் பகுதியில் வேட்டைக்கு வந்த ஒரு துரை, சமயக் கருப்பரின் வீரதீரத்தைக் கண்டு பொறாமைப்-பட்டு, அவரைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு-விட்டதாகச் சொல்கிறார்கள்.
‘‘வேறு சிலை செய்ய வேண்டாம் என்றும், உடைந்த பாகங்களையும் ஒன்றாக இணைக்க வேண்டாம் என்றும், இப்படியே இருக்கட்டும் என்றும் சமயக்கருப்பர் உத்தரவிட்ட-தால் அப்படியே வைத்துவிட்டார்-கள்’’ என்கிறார் கோயில் பூசாரி.
காவல்காரர் என்பதால் சமயக் கருப்பருக்கு கிடா, சேவல் பலி, சாராயம், சுருட்டு சமயத்தில் கஞ்சா கூட இவருக்குப் படைக்கிறார்கள்.
ஆனால் பாண்டி முனீஸ்வரருக்கு சைவம்தான்!
ஏன்? அவர்தான் ஈஸ்வரனின் அம்சமாயிற்றே!
பாண்டி முனீஸ்வரர் சன்னதியில் பெரிய அளவில் பூஜைகள் எல்லாம் கிடையாது. சாமியை நீங்கள் நன்றாகப் பார்த்து முடிந்ததும் பூசாரி, நெற்றி நிறைய விபூதியைப் பூசி விடுகிறார்.
அப்போது கிடைக்கும் மன நிம்மதி இருக்கிறதே... அது எப்படி இருக்கும் என்றால் _ ஏப்பு, நேர்ல போய் கும்புட்டு வந்து சொல்லுப்பூ!.

No comments:

Post a Comment

Animated Social Gadget - Blogger And Wordpress Tips